Tuesday, 28 March 2017

சதுரகராதி பதிப்பும் நூற்சிறப்பும்

சதுரகராதி பதிப்பும் நூற்சிறப்பும்
அகராதி என்பது நோக்கு நூலாகும். ஒரு மொழியிலுள்ள சொற்களைத் தொகுத்து அளிக்கிறது. மேலும், பொருள் விளக்கம், ஒலிப்பு முறை, எழுத்து வடிவ நிலை, ஒப்புமைச் சொற்கள், இலக்கணக் குறிப்பு, பிறப்பியல் நிலை போன்ற செய்திகளை அளித்து மக்களின் அறிவைப் பெருக்கித் தக்க பொருளைக் கண்டறிய உதவுகிறது. தமிழ் போலவே உலக மொழிகள் பலவற்றிலும் மிகப் பழங்காலத்திலேயே அகராதிகள் தோன்றியிருக்கின்றன.
அகராதி சொற்பொருள் விளக்கம்
அகராதி என்பதற்கு அகரமுதலி, அகராதி, நிகண்டு, ஆழ்சொற்பொருளி, உரிச்சொற்பனுவல் என்றெல்லாம் வேறு பெயர்களுண்டு.
தமிழில் உள்ள அகராதி என்பதற்கு ஆங்கிலத்தில் ’லெக்சிகோகிராபி’ (Lexicography) என்று கூறப்படுகின்றன. ’லெக்சிகோ’ என்பதற்குச் சொல் என்பது பொருள். ’கிராபி’ என்றால் எழுதுதல் என்று பொருள். ஆகவே ’லெக்சிகோகிராபி’ என்பதற்குச் சொற்களை எழுதுதல் என்பது பொருளாகும். ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி லெக்சிகோகிராபி என்பதற்கு அகராதி அல்லது பேரகராதி தொகுத்தல் அல்லது எழுதுதல், அகராதி தொகுக்கும் கலை அல்லது பயிற்சி என்று பொருள் தந்துள்ளது.
 நிகண்டும், அகராதியும்
நிகண்டுகள் என்பது, ஒரு பொருள் பல சொல் தொகுதிகளையும், பல சொல் ஒரு பொருள் தொகுதிகளையும் பாவிலமைத்துக் கூறும் நூலாகும். 8ஆம் நூற்றாண்டிலிருந்து 20ஆம் நூற்றாண்டு வரையில் உள்ள நிகண்டுகள் மொத்தம் 22 ஆகும்.
   நிகண்டு = தொகுதி, கூட்டம், நீளம் என்பன பொருளாம். சொற்கள் தொகுதியாக, நீளமான வரிசையில் கொடுக்கப்பட்டிருப்பதால் அகராதித்துறை நூல்களுக்கு நிகண்டு என்ற பெயர் வந்தது. எளிய முறையில் வெண்பாவால் இயற்றப்பெற்ற சிறு நூலான உரிச்சொல் நிகண்டு (கி.பி. 1400) சொற்பொருள் விளக்கும் நிகண்டுகளில் ஒன்றாகும். செய்யுளில் வழங்கும் திரிசொற்களுக்கு மட்டுமே பொருள் கூறப்பட்டதால் உரிச்சொல் நிகண்டு எனப்பெயர் பெற்றது.  
நிகண்டிற்கும் அகராதிக்கும் உள்ள வேறுபாடுகள் :
1.    நிகண்டு என்னும் பெயரில் செய்யுள் நடையில் இருந்த அகராதித்துறை, எல்லோரும் எளிதில் படித்துணருமாறு தனித்தனிச் சொல்நடையில் வந்தது.
2.    சொற்களின் முதல் எழுத்து இரண்டாவது எழுத்து வரைக்கு மட்டுமே இதற்குமுன் அகரவரிசை கவனிக்கப்பட்டது. வெள்ளையர் வந்தபின் இறுதி எழுத்து வரைக்கும் அகரவரிசை பின்பற்றப்பட்டது.
3.    பழைய நிகண்டுகளில் அருஞ்சொற்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. ஆனால், வெள்ளையர்கள் புதிதாகத் தமிழ் கற்றுக்கொண்டதனால் அவர்கட்கு அருஞ்சொற்கள் இவை எளிய சொற்கள் இவை என்ற பாகுபாடே தெரியாமற் போயிற்று. எனவே, அவர்கள் அருஞ்சொற்கள் எளிய சொற்கள், பேச்சு வழக்குச் சொற்கள் ஆகிய எல்லாச் சொற்களையும் தொகுத்துத் தமிழ்ச் சொல்வளத்தை முழு உருவத்தில் காட்டினர்.
இந்த வகையில் தொல்காப்பிய உரிச்சொல், நிகண்டுகள், அகராதிகள் என்று வளர்ந்த தமிழ் அகராதிக்கலை நாளடைவில் தனிநூல் அகராதி, தனித்துறையகராதி, கலைச்சொல் அகராதி, கலைக்களஞ்சியம், ஒப்பியல் மொழியகராதி, பழமொழியகராதி, புலவர் அகராதி, தொகையகராதி, தொடையகராதி, சொல்லடைவு என்று பல்வேறு அகராதிகளாக வளர்ச்சியடைந்துள்ளது.
அகராதியியலின் வரலாறு பற்றிக் கூறும் சுந்தர சண்முகனார், சிதம்பர இரேவண சித்தர் என்பவரால் 1594ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்ற அகராதி நிகண்டுஎன்பதே உலகின் முதல் அகராதி என்று கூறுகிறார். இருப்பினும் அகராதி நிகண்டு முதலிய நிகண்டு நூல்கள் அனைத்தும் செய்யுள் நடையில் இருந்ததால் படிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் அரிதாக மாறியிருந்திருக்கிறது. இந்நிலையில்தான் மேல்நாட்டாரின் அகராதிக்கலை தமிழகத்தில் செல்வாக்குப்பெற்று வளர்ந்திருக்கின்றது. பிற்கால அகராதி வளர்ச்சிக்கு அடிகோலியுள்ளது. மேல்நாட்டாரின் அகராதிகளிலிருந்து தமிழுக்குக் கிடைத்த நன்மைகளாகப் பின்வருவனவற்றைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் சுந்தர சண்முகனார்.
தமிழ் அகராதிக்கலையில் கி.பி. 17 ஆம் நூற்றாண்டிலிருந்து 3 முன்னேற்றங்கள் தோன்றின. அவை
1.    சொற்களை அகரவரிசையில் அடுக்கிப் பொருள் கூறுதல்
2.     சொற்பொருள் விளக்கம், நிகண்டுகளில் உள்ளதைப் போல் செய்யுள் வடிவில் அளிக்கப்பெறாம்ல், இக்கால அகராதிகளில்  உள்ளபடிச் சொற்களைத் தனித்தனியாக ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படுத்திப் பொருள் கூறுதல்
3.    அரிய சொற்களுக்குப் பொருள் கூறுவதுடன் வேறு பல துறைகளிலும் கலைச்சொல்லகராதிகள் வெளிவருதல் என்பன.
தமிழில் இதுவரை 50 நிகண்டுகளும் 150 அகராதிகளும் வெளிவந்துள்ளன.
சில அகராதிகள்
1732               வீரமாமுனிவர்                                  சதுரகராதி
1846               வீராசாமி முதலியார்                                    கையடக்க அகராதி
1912               அனவரதம்விநாயகம் பிள்ளை       மாணவர் தமிழகராதி
1915               கா. நமசிவாய முதலியார்                தமிழ் – தமிழ் அகராதி
1935               ஆனந்த விகடன்                               பகுத்தறிவுப்போட்டி அகராதி
1947               சுப்பிரமணிய ஐயர்                           அகராதி
1965               அ. சிதம்பரநாத செட்டியார்                        ஆங்கிலம் – தமிழ் அகராதி            

உரை நடை அகராதியின் முன்னோடி
தமிழில் எழுந்த நிகண்டுகள் நூற்பாக்களால் ஆனவை. அதன்பின் உரைநடையில் அகர வரிசையில் நிரல்படுத்தியவர் வீரமாமுனிவர். இவர் இயற்றிய அகராதிகள் மூன்று என்று இன்னாசி தன் ஆய்வில் கூறுகிறார். அவை
ஒரு மொழி அகராதி - சதுரகராதி
இரு மொழி அகராதி            - தமிழ் இலத்தீன் அகராதி
மும்மொழி அகராதி – போர்த்துகீஸ் - இலத்தீன் – தமிழ் அகராதி
சதுரகராதி நூற்பதிப்பு
நிகண்டுகளின் வழிவழியே வந்ததே அகராதி. இச்சொல் கி. பி. 1594இல் சிதம்பர இரவண சித்தர் இயற்றிய அகராதி நிகண்டு நூலினைப் பின்பற்றியது. அகராதிமுறை தற்பொழுது எளிதாகத் தோன்றினாலும் 16ஆம் நூற்றாண்டில் தோன்றிய பொழுது முழுமையடையவில்லை. ஏனெனில் சொற்களின் முதலெழுத்து ஒன்றி வருவதையே கவனித்து வந்தனர். இரண்டாம் எழுத்தை நோக்கவே இல்லை. முதலிரு எழுத்துக்களையும் நோக்கி எழுதிய நூல் அகராதி மோனைக் ககராதி எதுகை என்பதாகும். இதனுள்ளும் குறிப்பிட்ட ஒரு சொல்லைத் தேடுதல் என்பது இயலாத செயலாக இருந்தது.
1732இல் வீரமாமுனிவரால் ஆக்கப்பட்டது சதுரகராதி. இதுவரை பத்துப் பதிப்புகள் வெளியாகியுள்ளன என்றும் அவற்றுள் ஆறு பதிப்புகளைத் தான் கண்ணுற்றதாகவும் தன் ஆய்வுப்பதிப்பில் இன்னாசி கூறியுள்ளார். பெயர், பொருள், தொகை, தொடை என நான்காகப் பகுக்கப்பட்ட இவ்வகராதி முழுமையும் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு 1824 ஆகும். 1824 இலிருந்து 1979 வரை 9 பதிப்புகள் வெளிவந்துள்ளன. இவற்றுள் 1979 இல் வீரமாமுனிவர் ஆய்வுக்கழகம் வெளியிட்ட  பதிப்பு திருந்தியப் பதிப்பாக உள்ளது. அதன்பின்னர் வந்த கிறித்தவப் பாதிரிமார்களால் அனைத்துச் சொற்களையும் அகர நிரல்படுத்தும் அகராதி முறை வந்தது. பாதிரிமார்களுக்கு தமிழ் மொழி வேற்று மொழியான காரணத்தினால் எல்லாச் சொற்களுக்கும் பொருள் தெரிய அவசியமாயிற்று. அருஞ்சொற்கள், எளிய சொற்கள், வழக்குச் சொற்கள் என அனைத்திற்கும் பொருள் கண்டு நிரல்படுத்தினர். கி.பி. 1679இல் தமிழ்ப் போர்த்துகீசிய அகராதி என்னும் நூலை ப்ரொஇன்ஸா என்ற பாதிரியார் எழுதினார். இந்நூல் இப்போது மறைந்துவிட்டது. இதற்கு அடுத்து வீரமாமுனிவரால் எழுதப்பட்டதுதான் சதுரகராதி.
          இவ்வகராதி இயற்றப்பட்டது கி.பி.1732-ல். ஏடுகளில் இது பிரதிகள் செய்யப்பெற்றுத் தமிழ்நாடு முழுவதும் பரவியது. இந்நுாலின் இராண்டாந் தொகுதியான (பொருளகராதி) 1819-ல் அச்சிடப்பட்டது. நூல் முழுவதும் அதாவது பெயர், பொருள், தொகை, தொடை என அனைத்து இயல்களும் 1824-ல் ரிச்சா்டு கிளார்க் என்பவரது உத்தரவின்பேரில் தாண்டவராய முதலியார், இராமச்சந்திரகவிராயா் என்ற இரண்டு வித்துவான்களாலும் பரிசோதிக்கப்பெற்று சென்னையில் வெளியிடப்பட்டது. எனினும் 1928 பதிப்பே திருந்திய பதிப்பாக உள்ளது.

சதுரகராதி நூற்சிறப்புகள்
                சதுரகராதி என்றால் நான்கு வகைப்பட்ட அகராதிநூல் என்று பொருள். நான்கு வகையாவன : 1.பெயரகராதி 2.பொருளகராதி 3.தொகையகராதி 4.தொடையகராதி. பெயரகராதியில் ஒரு சொல்லுக்குரிய பலபொருள்கள் கொடுக்கப்பட்டிருக்கும். பொருளகராதியில் ஒரு பொருளுக்குாிய பல பெயா்களும் காணப்படும். தொகையகராதியில் இருசுடா், முக்குணம், நாற்படை என்பன போல நுால்களில் தொகை தொகையாக வழங்கப்பட்டுள்ளனவற்றிற்கு விளக்கங் காணலாம். தொடையகராதியில் செய்யுட்கு வேண்டும் எதுகைச் சொற்கள் (Rhyming words) வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன.
1.    ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒரு தொகுப்புப் பாடல் இடம்பெறுகிறது.
2.    தொகையகராதியில் ஒரு சொல்லின் தொகையை அடுக்கி விவரித்தும்( அறம் 2 – இல்லறம், துறவறம்) பின் இலக்கத்தொகை முறையில் (2 – அச்சுவினித்தேவர், அறம், ஆயுத வகை, ஆன்மா, இதிகாசம், இருமை, எச்சம், கந்தம், கூத்துவகை, சுடர், தோற்றம், பொருள், மரபு, வினை, வைணவாகமம்) அச்சொற்களைத் தொகுத்தும் கூறப்பட்டுள்ளது.
3.    சதுரகராதிக்கு முன்னர் எழுந்த நூல்களான பன்னிரு பாட்டியல், வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், சிதம்பரப்பாட்டியல், இலக்கண விளக்கப்பாட்டியல், தொன்னூல் விளக்கம், பிரபந்த மரபியல் ஆகியன. இவற்றுள் பிரபந்த மரபியல் மட்டுமே  சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கையை 96 என்று பதிவு செய்கிறது. மற்றவை :
பன்னிரு பாட்டியல்                                      68
வெண்பாப் பாட்டியல்                                  58  (கி.பி.13)
நவநீதப் பாட்டியல்                                       52 (கி.பி.14)
சிதம்பரப் பாட்டியல்                                     69  (கி.பி.16)
இலக்கணவிளக்கப் பாட்டியல்                   66 (கி.பி.17)
தொன்னூல் விளக்கம்                                  93 (கி.பி.17)
சதுரகராதி பிரபந்தங்களை பிள்ளைக்கவி முதல் சிறுகாப்பியம் ஈறாக தொகுத்து ஒவ்வொரு வகையையும் விளக்குகிறது.
4.    ஒன்றை வகைப்படுத்திக் கூறுவதோடல்லாது ஒவ்வொன்றிற்கும் விளக்கமும் தரப்படுகிறது. உதாரணமாக: ”உரை – 4 : கருத்துரை, பதவுரை, பொழிப்புரை, அகலவுரை அவையாவன: செய்யுட் கருத்துரைத்தலே கருத்துரை, சொற்றொறும் பதப் பயனுரைத்தலே பொழிப்புரை, இலக்கணமும் இலக்கியமும் எடுத்துக் காட்டிப் பொருள் விரித்துரைத்தலே அகலவுரை”.
5.    தொடையகராதியில் பற்பல தொடைப்பதம் மட்டுமல்லாது அடைமொழி, ஈரெச்சம், மறுதொகை, முற்று வினை, வினைக்குறிப்பு, வேற்றுமை முதலிய விகுதியுருபு, வடமொழிச் சங்கிருதம் முதலிய எழுத்துத் திரிபு, பெயரெச்சம் வினையெச்சம் பகுபதம் விகுதியாலும் வந்த தொடைப்பதங்களைத் தொகுத்துக் கூறியுள்ளார்.
6.    ஒரு சொல்லை நான்கு பிரிவுகளிலும் இடம்பெறும்விதம் மற்ற அகராதி நூல்களில் இல்லாத தனிச்சிறப்பாகும். சான்றாக உரை என்பதற்கு
பெயர் – உயர்ச்சி, உரையென்னேவல், ஒலி, சொல், சொற்பயன், தேய்பு, பொன்
பொருள் – அத்தம், அருத்தம், சொற்பயன், பதம், பாழி
தொகை - கருத்துரை, பதவுரை, பொழிப்புரை, அகலவுரை
தொடை - உயர்ச்சி, உரையென்னேவல், ஒலி, சொல், சொற்பயன், தேய்பு, பொன்
7.    சதுரகராதிக்குப் பின் எழுதப்பட்ட நிகண்டு மற்றும் அகராதி நூல்கள் இந்நூலை மூலமாகக் கொண்டு எழுந்துள்ளன என்பதும் ஆய்வில் தெரியவருகிறது.  குடுமியான்மலையைச் சார்ந்த சுப்பிரமணிய பாரதியாரால் இயற்றப்பெற்ற பொருட்தொகை நிகண்டு எனும் நூல் சதுரகராதியில் உள்ள தொடையகராதியைப் பின்பற்றி உள்ளன.
8.    18 ஆம் நூற்றாண்டிலேயே அறிவியல் சொற்கள் தொகுத்து இடம்பெறுதல் அவ்வகராதிக்கு மேலும் வலுசேர்க்கின்றன.
வானிலை – ராசி 12, மண்டலம் 3, 7, மாதங்கள் 12, அவற்றிற்குரிய நட்சத்திரங்கள்,   
                     கிரகங்கள்
மருத்துவம் – உயிர் வேதனை 12, மூலம் 10 (சிறுபஞ்சமூலம், பெருபஞ்சமூலம்)
கணிதம் – கணிதம் 8 :
சங்கலிதம் - கூட்டல்
விபகலிதம் - கழித்தல்
குணனம் - பெருக்கல்
பாகாரம் - பங்கிடல்
வர்க்கம் – சமமாகிய ஈரெண்ணின் பெருக்கம் ( நிலத்தைச் சமமாக
                  நாற்கோணம் செய்தல்)
வர்க்கமூலம் – அவ்வர்க்கத் தொகையினின்ற தன்மூலமாகிய  
                        வரம்பறிதல்
கனம் - சமமாகிய மூவெண்ணின் பெருக்கம் (குழியைச் சமமாகப்
            பன்னிரு கோணப்படுத்துதல்
கனமூலம் - அக்கனத் தொகையினின்ற தன்மூலமாகிய ஒரு
                    மூலையறிதல்
இசை – பண் - 4, இசை - 3,7, ராகத்தகுதி, 32 வகை ராகம், பாலை, பாவகை, பண்முறை, பண்கள் பாடப்படக்கூடிய நேரம், பண்களுக்குரிய தேவதைகள், தாளம், சந்தம் எனப்படும் வண்ணம், யாழ்ப்பெயர்கள் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.
 நிறைவாக . . .
மொழிக் களஞ்சியம் என்றழைக்கப்படும் சதுரகராதி சொல் வளத்தைப் பெருக்குகிறது.  தமிழ் மொழியில் வழங்கபெறும் அருஞ்சொற்கள், எளியச் சொற்கள், வழக்குச் சொற்கள் என அனைத்திற்கும் பொருள் தருகிறது.


No comments:

Post a Comment