டத்தோ சாமிவேலனார் தமிழ்விடு தூது
மலேசிய அமைச்சர், மாண்புமிகு முனைவர் ‘டத்தோ’ ச. சாமிவேலனாரை தமிழ் மாருத இதழின் புரவலராக வேண்டி 1993 ஆம் ஆண்டு அவ்விதழாசிரியர் முனைவர் ச. சாம்பசிவனாரால் இயற்றப்பெற்றது. அமைச்சரைக் கடல் கடந்து காண்பது அரிதான செயல். ஆதலால் இனிய தமிழைத் தூதாக அனுப்பியதாக ஆசிரியர் இயம்புகிறார். “இஃது அளவிற் சிறியது; பொருளிற் பெரியது. தமிழ்ச்சுவை மாந்தித் திளைப்பதில் பேரார்வமுடைய மாண்பார் டத்தோ அவர்கள் இந்நூலினைப் படிப்பர்; சுவைத்து மகிழ்வர்; தமிழ்மாருதப் புலவராகிப் பெரும் பொருள் தந்து உதவுவர் எனும் நம்பிக்கை உள்ளது” என்று நூல் என்னுரையில் ஆசிரியர் தூது எழுதியதன் நோக்கத்தைத் தெரிவிக்கிறார்.
சாம்பசிவனார் இயற்றிய டத்தோ சாமிவேனார் தமிழ் விடு தூதுவில் தூதிற்குரிய பொருள்களாக ஆசிரியர் அன்னம், கிளி, மான், மயில், தென்றல் போன்றவற்றைக் குறிப்பிடுகிறார்.
நூற் சிறப்பு
தமிழ் விடு தூது நூலைப் பின்பற்றிப் பாடப்பட்ட இந்நூல் 180 அடிகளைக் கொண்ட்து. அன்பின் விளைவால் எழுந்த புறப்பொருள் தூது நூலாகும். என்னுரை, பாடல்கள், பாடல்களின் குறிப்புரை ஆகியன இந்நூலின்கண் இடம்பெற்றுள்ளன. தமிழின் தகவு, தமிழர் மேன்மை பற்றிப் பேசும் சிறந்த நூலாகும்.
தூது இலக்கணம்
இந்நூல் தூதுக்குரிய இலக்கணங்களைச் சிறப்புறப் பெற்றுள்ளது. அவை:
1. மங்கல வாழ்த்துடன் தொடங்குதல் – ‘மங்கல மொழியே!’
2. தூது பொருளை விளித்துப் பேசுதல் – ‘மாண்பார் தமிழே! அமுதே! பசுமைத் தமிழே!”
3. தூதச் செல்லும் தமிழின் பெருமைகளைக் கூறல்
4. தூது பெறுபவரான டத்தோவின் சிறப்புகள்
5. தூது பொருள் யாது என்பதனைச் சுட்டல்
6. தூது செல்லத் தமிழே தகுதியுடையது என்பதனைக் கூறல்
7. தூது சென்ற தமிழ் செய்தியைக் கூறித் திரும்பி வருதல்
8. பாட்டின் இறுதி ஏகாரத்தில் முடிவது சிறப்பாகும். அதற்குச் சான்றாதாரமாய்,
”உயர்தமிழ்த் தூதே! உன்னடி தொட்டேன்!
அயர்வினைப் போக்க அனுப்பினேன் தமிழே”
என்ற வரிகள் அமைகின்றன.
டத்தோ சாமிவேலனார் சிறப்புகள்
1. சாமிவேலு சங்கிலிமுத்து (பிறப்பு: மார்ச் 8, 1936) மலேசிய இந்திய காங்கிரஸின்முன்னாள் தலைவர். இவர் 1979ஆம் ஆண்டில் இருந்து 2010ஆம் ஆண்டு வரை அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சேவை ஆற்றியுள்ளார். டத்தோ ஸ்ரீ சாமிவேலு மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் மூத்த அமைச்சராக இருந்து பதவி வகித்தவர். தகவல் தொழில்நுட்பம், பொதுப் பணி போன்ற முக்கியமான துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்தவர். நீண்ட காலம் மலேசிய அமைச்சரவையில் இருந்தவர் எனும் சாதனையும் இவருக்கு உண்டு. இவருடைய அரசியல் வாழ்க்கையில் சாதனைகளும் சோதனைகளும் பல உள்ளன.
2. சாமிவேலு 1963ல் இருந்து மலேசிய வானொலி, மலேசிய தொலைக்காட்சியில் பல ஆண்டுகள் தமிழ்ச் செய்தி அறிவிப்பாளராகவும், மலேசிய தகவல் இலாகாவில் நாடகக் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் ஒரு தமிழ்மொழி ஆர்வலர்.
3. 1979 ஆம் ஆண்டுச் சிலாங்கூர் மாநில சுல்தான் இவருக்கு ‘டத்தோ’ விருதை வழங்கினார். 1980-இல் ஜொகூர் மாநில சுல்தானும் இவருக்கு டத்தோ விருதை வழங்கிச் சிறப்புச் செய்துள்ளார்.
4. 1982-இல் கொரியக் குடியரசு சாமிவேலுவுக்குக் கொரிய அரச சேவை விருதை வழங்கியது. 1982-இல் இத்தாலிய அரசாங்கம் இத்தாலிய உயரிய அரசு சேவை விருதை வழங்கிக் கௌரவம் செய்துள்ளது. 1987-இல் உலக மாமனிதர் எனும் கௌரவ விருதை அமெரிக்க அரசாங்கம் வழங்கியது.
5. 1989 ஆம் ஆண்டுப் பேராக் சுல்தான் தன் 61ஆம் பிறந்த நாளில் சாமிவேலுவிற்கு ‘டத்தோ ஸ்ரீ’ எனும் விருதை வழங்கிச் சிறப்புச் செய்துள்ளார். அதே ஆண்டு இந்தியாவின் புகழ் பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வைர விழாக் கொண்டாட்டத்தின் போது சாமிவேலுவிற்கு டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப் பட்டது.
6. 2001 ஆம் ஆண்டில் தமிழகத் தலைநகர் சென்னையில் கலைஞர் கருணாநிதி, தமிழக முரசொலி அறக்கட்டளையின் சார்பில் சாமிவேலுவிற்கு ‘கலைஞர் விருது’ வழங்கிச் சிறப்புச் செய்தார்.
டத்தோ ச.சாமிவேலுவின் வாழ்க்கை வரலாறு தமிழ் மாருதம் இதழில் இடம்பெறுவதை ஆசிரியர்,
“மலேசியா நாட்டு அமைச்சர் மாண்புமிகு டத்தோ ச.சாமிவேலு அவர்களின் திருவுருவம் நான்காம் ஏட்டின் மேலுறையை அணி செய்கிறது. அமைச்சர் அவர்களைச் சாம்பசிவனார் மலேசியாவில் கண்டு பேசியதைப் பெருமையுடன் இவ்விதழில் என்னுரையில் எடுத்துக் கூறுகிறார். அதில், “சொலல் வல்லராய்ச் செயல் வீரராய்த் திகழும் அவர், தாய்மொழியாம் தமிழின்பாலும், தமிழினத்தின் பாலும் ஆராக்காதலுடையவர். அவரால், மலேசியாவாழ் தமிழர்கள் பீடுனடை போடுகின்றனர். அத்தகு நல்லாரைத் ‘தமிழ் மாருதம்’ போற்றவும், வாழ்த்தவும் கடமைப்பட்டுள்ளது. கடல் கடந்த நாடுகளில், யாரெல்லாம் தமிழுக்கும் தமிழருக்கும் பாடுபடுகின்றனரோ அன்னவரையெல்லாம் ‘தமிழ் மாருதம்’ போற்றும் புகழும் வாழ்த்தும்; வணங்கும்” என்று ‘என்னுரை’யில் கட்டுரைப் பற்றிய குறிப்பைத் தருகின்றார்.
தமிழ் தரும் இன்பமும் சுவையும்
மங்கல மொழியான மாண்புமிக்கத் தமிழ் மொழிக்குக் கரும்பும் கடுகளவு கூட நிகரில்லையாம். பாரில் வாழக்கூடிய இன்பம் தரும் மனைவியும் தமிழ் முன்னால் நாணி நிற்குமாம் என்று தமிழ் தரும் இன்பத்தை முதற்கண் வைத்து பாடலைத் துவங்குகிறார் ஆசிரியர்.
கண்டும் கேட்டும் கவினுற வேண்டும்
மண்டும் உயிர்த்தும் மருவுயே உறூம்
அறியும் புலனும் அருமை மனைவிபால்
பெருக உண்டு! பெரியோர் சொல்வர்!
மங்கை இன்பம் மாவளவினிதே! (தூது:11-15)
இவ்வரிகளோடு ஒப்புநோக்கத்தக்க, கண்டு கேட்டு உண்டு ( ) என்ற குறளும், ‘மங்கை ஒருத்தித் தரும் சுகமும் எங்கள் மாத் தமிழுக்கு ஈடில்லை” என்ற பாரதிதாசன் வரிகளும் குறிப்புரியில் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழுக்கும் அமுதென்று பெயர் என்ற பாரதிதாசன் கருத்திற்கிணங்க, ‘அமிழ்து’ என வழங்கப்பெறும் தமிழை உமிழ்தலின்றி உடனே சொன்னால் ’தமிழ்’ என்ற ஒலித் தக்கவாறு ஒலிக்கும். சாவு வாராது. முப்பழச்சுவையும் முத்தமிழ் முன் ஈடு கொடுக்க முடியாது. இக்கருத்தை விளக்குவதாய்,
முப்பழச் சுவையும் முத்தமிழ் உன்முன்
எப்படி ஈடு இங்கே கொடுக்கும்?
. . . . . . . . . . . . (தூது: 21-28)
என்ற வரிகள் உணர்த்துகின்றன.
தமிழைத் தூதுவிடக் காரணம்
சிவனார் தூதாகச் செல்லும் பொருட்கள பல இருக்க, தமிழே தூது செல்லத் தக்கது என்று கூறுகிறார். அன்னம், கிளி, மான், மயில், தென்றல் முதலான தூது பொருட்களில் ஏதேனும் ஒன்றை டத்தோவினிடத்து தூது விடுத்தால் எதிர்பார்த்த பலன் கிட்டாது என்கிறார். டத்தோ ‘தமிழ் தான் எம் தெய்வம்’ எனப் பெருமை கொண்டு விளங்குபவர். தமிழைத் தெய்வமாக வழிபடுவதால் தமிழுக்கு மட்டுமே தலை வணங்குவார். பிறருக்குப் பணிய மாட்டார். மற்றப் பொருட்கள் தூதாக மலேசிய நாட்டுக்குச் செல்லுதல் கடினம். அவ்வாறு சென்றாலும் டத்தோ வீட்டிற்குச் செல்லுதல் மிகமிகக் கடினம். ஒருகால் சென்றலும் அவர் சினமுற்று செய்யும் உதவிகள் செய்யமாட்டார். ஆதலால் அவர் தெய்வமாக எண்ணும் தமிழே தூதாக அனுப்பச் சிறந்த தகுதியுடையது என்கிறார்.
தமிழே தெய்வம் தருக்கி நிற்பார்!
தமிழென்றாலே தலைதாழ்த்திடுவார்!
மற்றவை தூதாய மனைகண் சென்றால்
செற்றங் கொண்டு செய்வன செய்யார்! (தூது: 41-44)
என்ற வரிகள் இக்கருத்தைப் பறைசாற்றி நிற்கும். மறுபடியும் மலேசியா சென்று டத்தோவைக் காண அதற்கான பொருள் இல்லை என்று தமிழைத் தூதுவிட்டதாகவும் கூறுகிறார்.
தமிழைப் பலவாறு புகழ்தல்
சாமிவேலனார் தமிழ் விடு தூதில் தண்டமிழ் உயிரைத் தன்னுயிராய் மதிக்கும் செல்வர்களான கவிஞர்கள், தமிழ் நாட்டறிஞர்கள், வெளி நாட்டறிஞர்கள் போன்றோர் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
வெளி நாட்டறிஞர்கள்
தமிழ் மொழியை உலகுக்கு அறியச் செய்த வெளி நாட்டறிஞர்கள் குறித்துத் தமிழ் விடு தூதில் சிவனார் வகைப்படுத்துகிறார். அவை கீழ்வருமாறு பகுக்கப்பட்டுள்ளன.
· மேலை நாட்டு கிறித்தவப் பாதிரியாரான சி.யு.போப் ஐயர் திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்திலே மொழிபெயர்த்தவர். இறக்கும் போது தம் கல்லறையில் ‘தமிழ் மாணவன்’ என்று எழுதச் சொன்னப் பெரியவர்.
· இத்தாலி நாட்டுக் கிறித்தவப் பாதிரியார் வீரமாமுனிவர். பெஸ்கி என்ற தம் பெயரை அழகு தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிய பெருந்தகையாளர். ’தேம்பாவணி’ எனும் கிறித்தவத் தமிழ்க் காப்பியத்தையும் பல சிற்றிலக்கியங்களையும் எழுதிய பெருமைக்குரியவர். தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தங்கள் பல கொண்டு வந்தவர்.
· மற்றொரு கிறித்தவப் பாதிரியார் கால்டுவெல் ஆவார். அவர் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலில், தமிழின் ஏற்றத்தைத் திறம்பட உரைத்துள்ளார்.
· மேலை நாட்டு அறிஞர் ஆல்பர்ட் சுவைட்சர் திருக்குறளின் பெருமையைக் ‘கீதை’ முதலானவற்றோடு ஒப்பிட்டுக் குறளின் தனித்தன்மையை உலகுக்கு உரைத்தவர்.
தண்டமிழ்க் கவிஞர்கள்
தமிழ் மொழி வளம் பெற வழிவகுக்கும் இலக்கியங்கள் பல படைத்த தண்டமிழ்க் கவிஞர்களான தொல்காப்பியனார் முதல் பாண்டித்துரைத் தேவர் வரையுள்ளவர்களை வரிசைப்படுத்துகிறார் இந்நூல் ஆசிரியர்.
· தொல்காப்பியம் தந்த தொல்காப்பியனார், திருவள்ளுவர், திருமுருகாற்றுப்படை நெடுநல்வாடை இயற்றிய ஆசிரியர் நக்கீரனார், மதுரைக் காஞ்சியைப் பாடிய மாங்குடி மருதனார் போன்ற சங்கப் புலவர்களும் சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகள், சீர்காழியில் தோன்றிய திருஞானசம்பந்தர் தேவாரம் பாடிய அருளாளர் திருநாவுக்கரசர், இறைவனால் தடுத்தாட் கொள்ளப் பெற்றதும் சேக்கிழார் பாடிய பெரியபுராண நாயகருமான சுந்தரனார், மாணிக்கவாசகர் ஆகிய புலவர்களும் வள்ள பிரான் ராமலிங்க அடிகளார், சுப்பிரமணிய பாரதி, பாரதிதாசன், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் முதலானோரும் தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், திரு.வி.கல்யாண சுந்தரனார், நாவலர், உ.வே.சாமி நாத ஐயர், பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார், பாண்டித்துரைத் தேவர் முதலான பலரும் தமிழே உன் புகழை ஆணித்தரமாகச் சொல்லினர்.
இறைவனும் இன்தமிழும்
“உலகம் யாவையும் தாமுளவாக்கலும்” என்று கம்பரும், “பைந்தமிழ்ப் பசுங் கொண்டலே” என்று குமரகுருபரும், “முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன் முருகன்” அருணகிரி நாதரும் “கணிகண்ணன் என்ற கவிஞனுக்காகக் காஞ்சி மணிவண்ணப் பெருமாள் அவன்பின்னே சென்றான் என்ற வரலாறும் தமிழின் பெருமையை நன்கு தெளிவுப்படுத்தும். அதனை,
“உலகம் எல்லாம் உளவாக் கிடும்நம்
அலகி லாவுடை அருட்குண இறைவனும்
பைந்தமி ழே!உன் பின்னால் வருகுவன்!
விந்தையன்றோவியனுடை உலகில்!
உன்மொழி கொண்டு ஒருவர் வைதால்
நன்மொழி நல்கும் நம்தமிழ் முருகன்!” (தூது: 58-62)
என்கிற வரிகள் உணர்த்தும்.
டத்தோ சிறப்புகள்
அமைச்சர் மாண்புமிகு டத்தோ சாமிவேலனார் நன்றே செய்யும் நல்ல அமைச்சர். வள்ளுவர் கூறும் ‘அமைச்சு’ இலக்கணத்திற்கு ஏற்ப விளங்குபவர். எல்லாவற்றிற்கும் மேலாக 6ஆவது மற்றும் மொரீசியசில் நடந்த 7ஆவது உலகத் தமிழ் மாநாட்டிலும் அவர் கூறியதாவது,
“எங்கே தமிழர் என்ன செய்யினும்
அங்கே உவந்து அரும்பே ருதவிகள்
கேட்டால் தருவேன்! கிளர்ந்து வருவேன்
மீட்பேன் தமிழர் மேலாம் புகழை” (தூது: 73-76)
என்பது. இவ்வாறு மொரீசியசில் வான்முட்டும் கைத்தட்டல்களுக்கு இடையே டத்தோ ஆற்றிய உரைதனைக் கேட்ட சிவனார் மனம் மகிழ்ந்து ஒருபோதும் அவரை விட்டு விலக மாட்டோம் என்று உறுதி கொண்டார். இவர் சிறப்புக்களாகச் சாம்பசிவனார் கூறுவன பின்வருமாறு விளக்கப்படுகின்றன.
(1)ஆளுமைத்திறம்:
சீர்மிகு பண்புகளுடைய அருந்தமிழர் சாமிவேலனார். அனைவரும் போற்றும் நல்ல அமைச்சரும் ஆவார். அழகுமிகு வேத வனமாகிய மலேசியாவில் வீற்றிருக்கும் நல்லமைச்சர் சாமிவேலனார் காதல் மனைவி திருமதி இந்திராணி கருத்தினில் உறைவார். அவர் உள்ளத்தில் இருப்பார். காற்றாடியைப் போல் திண்டாடிய பல்திற மக்களை ஒன்றாய் திரட்டிய உத்தமர்.
“கேட்டார்ப் பிணிக்கும் தகை யவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்”
என்ற குறளுக்குத் தகத் தம் சொற்பொழிவினைக் கேட்போரை ஈர்க்கும் திறன் கொண்டவர் சாமிவேலனார். சொற்பொழிவினைக் கேட்காத மற்றவர்களோ, ‘ஐயோ இப்பேச்சைக் கேட்காமல் விட்டுவிடோமே’ என்று ஏங்க வைப்பவர். இன்னிசைப் பாடல் போல் நாவன்மை மிக்கவர்.
(2)கொடைத்திறம் :
சாமிவேலனாரின் கொடைத்திறத்தை இந்நூலாசிரியர் வியந்தோதும் திறம் போற்றுதற்குரியது. கடையெழு வள்ளல்களில் ஒருவனான பாரி முல்லைக்குத் தேர் ஈந்தவன். இப்பாரியின் சிறப்பினை சுந்தரமூர்த்தி நாயனார் தம் தேவாரத்தில்,
“கொடுக்கிலாதனைப் பாரியே எனினும் கொடுப்பா ரிலையே”
எனப் பாரியை ஏத்திப் பாடுகின்றார். அப்பாரிக்கு இணையான வள்ளல் தன்மையுடையவர் சாமிவேலனாரே என்று அவரைப் பற்றியறிந்தோர் பெருமையாகப் பேசுவர். மாண்புமிகு டத்தோ தான் இருக்கும் அமைச்சுப் பணியிடத்தில் திங்கள் ஒரு நாள் யாரேனும் இடருற்று வந்தால் பை நிறைய ‘வெள்ளி டாலர்களை வைத்துக் கொண்டு கை நிறைய அள்ளி அள்ளித் தருவார். அது ஏற்பவரது தவத்தைப் பொறுத்த்து. இத்தகு வள்ளல் குணம் கொண்ட டத்தோ அவர்களை ‘பாரி வள்ளல்’ என்று ஆசிரியர் கூறுவது மிகச் சரியாகப் பொருந்துகிறது.
(3)தமிழ்ப் பற்று :
சிவனார் தமிழ் ஆர்வலரான டத்தோ சாமிவேலனாரை மலேசிய அரண்மனையில் காணச் சென்ற போது தன்னுடன் மகிழ்ந்து உரையாடியதையும், அப்பொழுது அமைச்சர் தமிழ் இலக்கியத்தில் சில சுவையான பகுதிகளையும் குறிப்பாக முனைவர் மு.வ.வின் நூல் ஒன்றைச் சுட்டிக்காட்டி மகிழ்ந்ததையும் நூலில் பதிவு செய்துள்ளார். அவரது பேச்சில் ஆழமான தமிழறிவை தான் உணர்ந்ததாகவும் கூறுகிறார்.
(4)அரசியல் அலையிலும் உறுதி உள்ளம் படைத்தவர் :
அரசியல் என்னும் பெருங்கடலிலும் துன்பம், எதிர்ப்பு, பகைமை, வீண்பழி என்னும் பேரலைகள் அடிக்கடி வந்து அலைக்கழிக்கும். அக்கடலலை ஓயட்டும். ஓய்ந்தபின் ஆக்கப்பணிகளைச் என்ற ஒருவர் நினைத்தால் நடக்குமா?
“நன்றே செய், நன்றும் இன்றே செய்,
இன்றும் இன்னே செய்”
என்ற சான்றோரகளின் வாக்குபடி, நல்லதை செய்வதாயின் அதைச் செய்ய நாளும் கோளும் பார்க்க வேண்டாம். அவ்வாறு பார்க்காத உள்ளம் படைத்தவர் டத்தோ. மனத்திண்ணம் என்னும் உயர்ந்த பாறைகளை எத்துணை எதிர்ப்பு அலைகளையும் வெற்றி கொள்ளலாம். தமிழ்ப்பணி என்னும் விதைகளைத் தூவலாம். வீரமிக்க வேலாயுதனார் மந்தில் ஈரமிகுந்த ஏந்தலாக விளங்குபவர். மலேசியா சென்று காண்பதற்குரிய பொருளுமில்லை என்று சிவனார் விளம்புகிறார்.
“வீர மிக்க வேலா யுதனார்
ஈர மிக்குடை ஏந்தல் என்போம்”
மலேசிய நாட்டுச் சிறப்பு
மலேசிய நாடு தனிச்சிறப்புற்றது. ‘பசியாறியாயிற்றியா?’ என்று வந்தோரைக் கேட்கும் விருந்தோம்பல் பண்புதனைக் கொண்ட மக்களைப் பெற்றுள்ளது. ‘கலகல’ எனச் சுறுசுறுப்பாகத் திகழும் தலை நகர் கோலாலம்பூரைக் கொண்டுள்ளது. மலேசியாவில் இருக்கும் ஒரு பகுதியின் பெயர் ‘ஈபோ’ என்பதாகும். ஈ போ என்று பிரித்து, இதோ கொள், செல் எனப் பொருள் கொள்ளலாம்.
‘ஈபோ’ என்ற இணையிலாப் பகுதி
‘போபோ’ என்பர் பொற்புறு புலவர்!”
இவ்விடத்தில் ஆசிரியரின் சிலேடைத் தன்மை கொண்டு பாடக் கூடிய திறம் தெள்ளிதின் விளங்கும்.
தூது விடுக்கும் செய்தி
சிவனார் நடத்திக் கொண்டிருக்கும் உலகளாவிய திங்கள் இதழான ‘தமிழ் மாருத’த்தின் புரவலராக வேண்டி டத்தோவிற்குத் தூது விடுக்கிறார். டத்தோவைப் புரவலராக வேண்டிக் கொள்வதற்கென்றே, மலேசியா சென்று மாண்பார் அமைச்சரை நேரில் கண்டு வேண்டினார். அரசியலில் நெருக்கடியான சூழலிலும் அவர் தமிழின்பால் கொண்ட பேரன்பால் நெடு நேரம் உரையாடி மகிழ்ந்ததாகக் கூறுகிறார். ‘புரவலர் தொகை’யை அனுப்புவதாகவும் கூறியுள்ளார். அதன் விளைவாக அம்மாத இதழின் மேலட்டையில் அவர் வண்ணப்பட்த்தை வெளியிடப்பட்டது. மேலும் அவ்விதழில், ‘கடல் கடந்த நாட்டில் கன்னித் தமிழர் காவலர்’ என்ற தலைப்பில் டத்தோவின் வாழ்க்கை வரலாற்றையும் சிவனார் எழுதி வெளியிட்டுள்ளார்.
தமிழே தூது செல்லத் தக்கது
தூதாகச் செல்ல இருக்கும் பொருட்களாக அன்னம், கிளி, மான், மயில், தென்றல் என்று பலவாக இருந்தாலும் டத்தோவினிடத்து இப்பொருட்களில் ஏதேனும் ஒன்றைத் தூதாக அனுப்பினால், எதிர்பார்த்த பலன் கிடைக்காது. ஆக டத்தோ சாமிவேலானாருக்குத் தூது செல்வதற்குத் தகுதியுடையது தமிழ் ஒன்று மட்டுமே என்கிறார்.
“தமிழே தெய்வம் தருக்கி நிற்பார்
தமிழென் றாலே தலைதாழ்த் திடுவார்
மற்றவை தூதாய மனைக்கண் சென்றால்
செற்றாங் கொண்டு செய்வன செய்யார்”
அஃதாவது டத்தோ தமிழ்தான் எம் தெய்வம் எனப் பெருமை கொண்டு விளங்குபவர். அவர் தமிழைத் தெய்வமாக வழிபடுவதால் தமிழுக்கு மட்டுமே தலை தாழ்த்துவார். பிறருக்குப் பணிய மாட்டார்.
அடுத்து மற்றப் பொருட்கள் தூதாக மலேசிய நாட்டுக்குச் செல்லுதல் கடினமானதாகும். அவ்வாறு சென்றாலும் டத்தோ இல்லத்திற்குள் நுழைதல் எளிதான செயல் அல்ல. மற்றப் பொருட்களைக் கண்டால் சினமுற்றுச் செய்யும் உதவிகள் செய்யாமலும் விடுவார். எனவே தமிழே தூதாகச் செல்லும் முழுத்தகுதியும் கொண்டது என்கிறார்.
செவ்வி அறிந்து செப்புதல்
எச்செயலையும் சமயம் பார்த்துச் சொன்னாலோ, செய்தாலோ அச்செயல் கைகூடும் என்பர். தூதாகச் செல்லும் ‘தமிழ்’ எப்படியிருந்து, எந்த நேரத்தில் , எவ்வாறு இயம்ப வேண்டும் என்பது விளக்கப்படுகிறது. டத்தோ மனைக்குள் சென்று, தமிழை ஓரிடத்தில் தனித்து நிற்க வேண்டும் என்றும் அவர் ‘தண்டமிழ்த் தலைவர்’ என்பதை அவரது சொல், செயல், அவரைச் சூழ்ந்திருப்போர் கூற்றால் அறியலாம் என்றும் விளக்குகிறார்.
….. தமிழே ! அவரைக் காணக்
காதலால் உன்னைக் கருத்தினிற் கொண்டேன்!
அனுப்புவன் தூதாய்! அவர்மனை செல்க!
தனித்தே நிற்க! தண்டமிழ்த் தலைவராய்
இருப்பது அறிவாய்! .....
தேன் போன்று இனிய சொற்கள் பேசும் டத்தோவின் அன்புத் துணைவியார் இந்திராணி டத்தோவின் புகழுக்குப் பெரும் காரணமாக அமைகின்றார். ‘ஏறுபோல்பீடு நடை போடும்’ டத்தோவுக்குப் பலவகையாலும் உறுதுணையாடு இருப்பவர். அதனால்தான் இன்ரும் அவர் பெருமையோடு விளங்குகிறார். பார்வதி போன்று டத்தோ அருகில் இருக்கும் இந்திராணி அம்மையார் மூலமாகச் சொல் என்று தமிழைக் கேட்கிறார். டத்தோவுக்குப் பல்வேறு அலுவல்கள் இருப்பதால் அந்நேரத்தில் சொன்னால் கேட்கவும் இயலாது. என்வே, அவர், தம் காதல் மனைவியாம் இந்திராணியைத் தன்னருகே இருத்தி, இனிதாகத் தனித்திருக்கும் சமயத்தில் செய்தி சொல்ல வேண்டும். அடையும் இந்திராணி அம்மையார் மூலமாகச் சொல்ல வேண்டும் என்று தமிழைத் தூது அனுப்பக்கூடிய சரியான வேளையினை எடுத்து இயம்புகிறார் சாம்பசிவனார்.
புரவலர் தொகை பெற்று திரும்புதல்
’தமிழ் மாருதம்’ இதழ் உலகின் பல இடங்கட்கும் சென்று தமிழ் மணம் வீசுகிறது என்ற செய்தியை டத்தோவுக்கு எடுத்துரை தமிழே என்று தமிழைக் கேட்கிறார். துணைவியார் இந்திராணி வழியாக எடுத்துச் சொன்னால் அவர் கொஞ்சும் வேளையில் இனிதுரைப்பார். அவ்வாறு கூறும் பொழுது, ‘தமிழ் மாருதம்’ புரவலராய் இருந்து உயர் தமிழுகு உறுதுணையாயிருத்தல் நமது கடமையன்றோ? எனப் புன்முறுவலுடன் உரைத்திடுவார். உடனே டத்தோவும் ’சரி’ என்று கூறி, ‘புரவலர் தொகையை உடனே கொடுத்திடு! என்பார் ஆதலால் தமிழே! தூதாக வந்த்து எண்ணி உள்ளம் மகிழ்ந்து ஆடுவார்; பாடுவார் என்று தொகைதனைப் பெருக தொன்மைத் தமிழே என்று தமிழைத் தூது விடுக்கிறார்.
’விடுத்திடு பணமும் விரைந்தே’ என்பார்!
உன்சொற் கேட்டு உவப்புடன் ஆடுவார்!
உன்னை மதித்து உயர்வாய்ப் பாடுவர்!
தொகைதனைப் பெறுக தொன்மைத் தமிழே!
அவர் தருகின்ற பொருளை வான்வழி ஊர்ந்து வந்து வண்டமிழ் மதுரைக்கு வந்து சேர்க என்றும் தமிழே! நீ கொண்டு வந்த பொருளை உன்னுடைய வளர்ச்சிக்கே ஆக்குவேன் என்றும் உறுதி மொழி விடுக்கிறார் ஆசிரியர்.
பிற இலக்கியச் சாயல் கொண்ட வரிகள்
சாமிவேலனார் தமிழ்விடு தூதில் பிற கவிஞர்களின் பாடற்சாயல் இடம்பெறுகின்றன. அவை கீழ்வருமாறு தொகுக்கப்படுகின்றன.
1. ”கண்டும் கேட்டும் கவினுற உண்டும்
மண்டும் உயிர்த்தும் மருவியே உற்றும்
அறியும் புலனும் அருமை மனைவிபால்
பெருக உண்டு! பெரியோர் சொல்வர்!”
”கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள” - குறள்
2. ”மங்கை இன்பம் மாவளவினிதே”
“”மங்கை ஒருத்திக்கும் சுகமும் எங்கள் மாத் தமிழுக்கீடில்லை” – பாரதிதாசன்
3. ”’அமிழ்து அமிழ்து அமிழ்து ‘ என்று
உமிழ்த லின்றி உடனே சொன்னால்
தமிழே உன்ஒலி தக்கவா றொலிக்கும்!
‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ – பாரதிதாசன்
4. “உலகம் எல்லாம் உளவாக் கிடும் நம்
அலகி லாவுடை அருட்குண இறைவனும்”
“உலகம் யாவையும் தாமுளவாக்கலும்” – கம்பர்
5. ”பைந்தமி ழே!உன் பின்னால் வருகுவன்!”
’கணி கண்ணன்’ என்ற கவிஞனுக்காகக் காஞ்சி மணிவண்ணப் பெருமாள் பின் சென்றான் என்பது வரலாறு.
”பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங் கொண்டலே’ – குமரகுருபரர்
6. “உன்மொழி கொண்டு ஒருவர் வைதால்
நன்மொழி நல்கும் நம்தமிழ் முருகன்!”
‘முத்தமிழால் வைதோரையும் அங்கு வாழ வைப்போன்’ முருகன் – அருணகிரி நாதர்
7. ‘கேட்டார் பிணிக்க, கேளார் வேட்ப,
பாட்டாய் ,இனிக்கப் பேசும் நாவலர்’
‘கேட்டார் பிணிக்கும் ......... சொல்” – திருக்குறள்
8. ‘கொடுக்கிலா தவனைக் கொடைப்பா ரிஎனினும்
கொடுப்பா நிலையே கொடுமையாளன்!
என்றே சுந்தரர் எடுத்துப் பாடினார்’
சுந்தரமூர்த்தி நாயனார் தம் தேவாரத்தில்,

9. ”உமையவள் போன்ற உறுதுணை தன்னை
10. அமைச்சர் தன்பால் அருகே இருத்தி
இனிதாய்க் கொஞ்சும் இன்ப வேளையில்
அணித்தே நின்று, அம்மை வழியாய்
எடுத்தே இயம்புக எமது நல்வேண்டுதல்!”
“ஆய்முத்துப் பந்தரில் . . .. நீ முத்தம் தா என்று அவர் கொஞ்சும் வேளையில்” – திரு நெல்வேலி ‘ நெல்லையப்பர்- காந்திமதி’ பற்றிக் கவிஞர் பாடிய பாடல்.
டத்தோ தமிழ்ப்பற்றுக் கொண்டு தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் நல் உள்ளம் படைத்தவர். அவரிடம் தமிழைத் தூதாக அனுப்பினால் நோக்கம் எளிதில் நிறைவேறும். ஆகையால் இன் தமிழைத் தூது அனுப்பியதாக ஆசிரியர் கூறுகிறார். நூலின்கண் காணப்படும் கருத்துப் புலமை, சொல்லாட்சி, கவித்திறம் ஆகியன ஆசிரியரின் தமிழ்ப்பற்றைத் தெள்ளிதின் உணர்த்துகிறது.
முனைவர் இரா.பொன்னி, உதவிப் பேராசிரியர், பாத்திமா கல்லூரி, மதுரை