பாரதியார் படைப்புகளில் தேசிய ஒருமைப்பாடு
தமிழ் இலக்கிய வரலாற்றில் இருபதாம்
நூற்றாண்டின் தொடக்கம் ஒரு திருப்புமுனையாக அமைவதற்குக் காரணமானவர் மகாகவி பாரதியாவார்.
'இந்திய தேசியக் கவிஞர்களுக்கு , இடையில் திலகம் போன்றவர் பாரதியார்' என்று வினோபா
பாவேவால் போற்றப் பெற்றவர். தன் , இனம், தன் மொழி, தன் நாடு என்று மட்டும் சிந்திக்காமல்
மற்ற இனங்கள், மொழிகள், நாடுகள் என்று சிந்தித்துக் கவலைப்பட்டு அச்சிந்தனைகளைத் தன்
படைப்புகளில் வெளிப்படுத்தியவர் பாரதி. ஆதலால் ‘உலக மகாகவி’ என்றும் ‘தேசியகவி’ அழைக்கப்படுகிறார்.
அவர் காளியிடம் வேண்டும் போது, ’மண்ணிலார்க்குந் துயரின்றிச் செய்வேன்; வறுமை என்பதை
மண்மிசை மாய்ப்பேன்; தானம் வேள்வி தவம் கல்வி யாவும் தரணி மீது நிலைபெறச் செய்வேன்’
என்று வேண்டுகிறார். இவ்வாறு இவர்தம் எண்ணற்ற பாடல்களில் தேசிய ஒருமைப்பாட்டு விழுமியங்கள்
பெருக்கெடுத்து உள்ளன. ’ஊருக்கு நல்லது சொல்வேன்; உண்மை தெரிந்து சொல்வேன்’ என்ற மன உறுதி கொண்ட பாரதி தன் உள்ளத்து
உணர்வுகளைக் கவிதைகளில் வெளிப்படுத்துகிறார்.
”மண்ணும் இமயமலை எங்கள் மலையே!
மாநில மீததுபோற் பிறிதில்லையே!
இன்னறு நீர்க் கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே”
பாரதியின் விடுதலை
உணர்வு, தேசிய உணர்வு, பக்தி உணர்வு, பெண்விடுதலை, சீர்திருத்த உணர்வு, ஒற்றுமை உணர்வு
போன்றன பாரதியார் படைப்புகளில் தன்னம்பிக்கை நோக்கோடு மிளிர்கிறது.
எண்ணங்கள் தான்
நம்மை வாழவைக்கும். எண்ணங்களில் உயர்வு இருந்தால் வாழ்வு சிறக்கும். பாரதியின் ‘எண்ணுவது உயர்வு’
எனும் வைர வரி இதனை உணர்த்துகின்றன. இதைத்தான் வள்ளுவரும் ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’
என்கிறார். உயர்வானவற்றை நினைப்பது மட்டும் போதாது கிடைத்ததை விட்டுவிடக்கூடாது என்பதை 'கல்வியதை விடேல்' என்கிறார். எந்த சூழ்நிலையிலும் மனம் நொந்துபோக
கூடாது என்றும் நம்பிக்கை தருகிறார். 'சிதையா நெஞ்சுகொள்' , 'தோல்வியில் கலங்கேல்'
என்ற வரிகளில் எப்பொழுதினும் கலங்கா உள்ளமும், சிதைந்துவிடா மன உறுதியும் வேண்டும்
என்று அறிவுறுத்துகிறார்.
பொதுவாக பாரதியார் தமது
படைப்புகளில் தேச ஒற்றுமையை எடுத்துக் காட்டியுள்ளார். அவர் பாரத தேசம் என்ற பாடலில்
அக்கருத்தினை முன் வைக்கும் போது,
”சிங்களத் தீவினுக்கோர்
பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி
சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும்
நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்
செய்குவோம்”
என்று உலகத் தொழில் அனைத்தும் உவந்து செய்வோம் என்று தொடர்ந்து
பல்வேறு திட்டங்களை அடுக்கிக் கொண்டே செல்கின்றார். தகவல் தொழில் நுட்பத்த்துறை வளர்ச்சியே
உலக மானுடத்தை இணைக்கும் பெருஞ்சக்தி என்பதை உணர்ந்திருந்த பாரதி, விண்ணுக்கும் மண்ணுக்கும்
இடையிலான அனைத்து அறிவுச் செல்வத்தையும் இந்திய மக்கள் பெற்றாக வேண்டும் என்பதையே இப்பாடல்
வழி உணர்த்துகிறார்.
வறுமை விடாது
துரத்திய போதும் சிதையா நெஞ்சு கொண்டு வாழ்ந்தவர் பாரதி. ‘குன்றென நிமிர்ந்து நில்’
புதிய ஆத்திசூடி வரி மனித ஆளுமையில் தான் இந்;த தேசம் பெருமை பெற முடியும், வெற்றியை
நாட முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்ததை விளக்குகிறது.
”தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?”
என்றார் முண்டாசு கவிஞர். துன்பத்தில் மனதைத் தொலைத்து கூற்றுக்கு
இரையாகும் சாதாரண வேடிக்கை மனிதரைப் போல் வீழாது தன் எழுத்துத் திறத்தால் இவ்வையத்தைப்
பாலித்திடச் செய்தவர்.
கல்வி கற்ற வழியைப் பின்பற்றி நடக்க
வேண்டும். அப்போது தான் நல்ல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாக பொருள் தரும். வாழ்க்கையில்
பிறரைச் சார்ந்து வாழக் கூடாது என்பதைத் தெளிவுறுத்துவதாய் ‘கைத்தொழில் போற்று’ என்கிறார்.
அதுவே சில நேரங்களில் ஒற்றுமையாகப் பலர் சேர்ந்து தொழில் செய்தால் பெரும் பொருள் ஈட்டுவதற்கு
ஏதுவாக ,ருக்கும் ஆக, கூடித் தொழில் செய்தால் பணத்தைப் பெருக்கலாம் என்கிற ஒற்றுமை
உணர்வு வித்தை மனதில் விதைக்கிறார் பாரதியார்.
வங்கப் பிரிவினைக்குப் பின் பக்கிம்
சந்திரரால் எழுதப்பட்டது ‘வந்தே மாதரம்’. அப்பாடலால் ஈர்க்கப்பட்ட பாரதி இதனை மொழிபெயர்த்து
‘இந்தியா’ இதழில் பிரசுரித்தார். தேச முழுமைக்கும் பொதுமைப்பாடலாகக் கருதி சில பகுதிகளைக்த்
திருத்தம் வெளியிட்டார். ‘வந்தே மாதரம்’ என்பது ஒவ்வொரு இந்திய மக்களின் ‘மந்திரச்
சொல்லாக’ இருக்க வேண்டும் என்ற அவசியத்தை இப்பாடலில் உணர்த்திச் செல்கிறார்.
“ஒன்று பட்டால் உண்டு வாழ்வு – நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் – இந்த
ஞானம் வந்தால்பின் நமக்கெது வேண்டும்
எப்பதம் வாய்த்திடுமேனும் னம்மில்
யாவர்க்கும் அந்த நிலை பொதுவாகும்
முப்பது கோடி முழுமையும் வாழ்வோம்
– வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்”
இவ்வாறு இந்தியர் அனைவரையும்
ஒரு சேர அழைத்து ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே அனைவருக்கும் நன்மைகள் ஏற்படும். அதுவே
சிறந்த ஞானமும் ஆகும்.
’பிறப்பொக்கும் எல்லா
உயிர்க்கும்’ என்ற வள்ளுவன் வாக்கும், ’ஒன்றே குலமும் ஒருவனே தேவன்’ திருமூலர் நோக்கும்
தேச நாட்டில் எல்லோரும் சமம் என்பதை முன்னிறுத்துகின்றன. பிறப்பினால் அனைவரும் ஒன்றே;
செய்யும் தொழிலினாலே பாகுபடுத்தப்படுகின்றனர் என்கிறார் பாரதியார். சாதிகளும் சாதிப்பிரிவுகளும்
இங்கெதற்கு வேண்டும் சாதிப்பாகுபாட்டினால் சண்டையு கூச்சலும் ஏற்பட்டு சமத்துவம் பறந்தோடிவிடும். ’பாரதம் என்பது ஓர் வீடு’ இங்கு
விரிவினைகள் இருக்கக் கூடாது என்று வீறு கொண்டு எழுகிறார். மதத்தாலும் இனத்தாலும் தேசம்
பிளவுப்படும் நிலையைத் தம் பாடல்களில் சுட்டிச் செல்கிறார்.
பாரதியார் கீழோர் என்று குறிப்பிடுவது
அறிவாலும் வீரத்தாலும் செயலாலும் கீழ்மைத்தனமாக உள்ளவர்களைக் குறிப்பிடுகிறார். அவர்களிடம்
இருக்கும் செல்வாக்கைக் கண்டு அஞ்சக்கூடாது. அதேபோல எப்போது தலைநிமிர்ந்து இருக்கவேண்டும்
எதற்காகவும் நாய் போல் வாழக்கூடாது தாழ்ந்து போகக் கூடாது கெட்டவர்களுக்குப் பயப்படக்
கூடாது மானத்தோடு வாழ வேண்டும். மனிதன் ,ந்தக் கருத்துக்களைப் பின்பற்றினால் எப்போதும்
சுய மரியாதையை இழக்கமாட்டான் இவையெல்லாம் நாட்டு மக்களுக்காக மட்டும் கூறியது அல்ல
அது போலவே பாரதியாரும் வாழ்ந்து காட்டியவர்.
”அச்சமில்லைஅச்சமில்லைஅச்சமென்பதில்லையே
இச்சகத்துளோரெலாம்எதிர்த்துநின்றபோதினும்,
இச்சைகொண்டேபொருளெலாம்இழந்துவிட்டபோதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே”
என்ற வரிகளை வாசிப்பவர்களின் மனதில் ஒரு துணிச்சலும் தன்னம்பிக்கையும்
பிறப்பது உறுதி. விரும்பிய பொருளெல்லாம் இல்லாது வெறுமையாய் நின்றாலும் அச்சமில்லாது
துணிவோடு இருக்க வேண்டும் என்னும் நம்பிக்கையை இப்பாடல் வரிகள் விதைக்கின்றன.
“முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொதுஉடைமை
ஓப்பிலாத சமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை”
என்று பொதுவுடைமைச் சிந்தனைகளை வேரூன்றச் செய்தவர் பாரதி. ‘தேசத்தைக்
காத்தல் செய்’ என்ற பாரதியின் புதிய சிந்தனை அவர்தம் தேசப்பற்றை நன்கு விளக்குகின்றது.
பாரதியாரின் படைப்புகள் அனைத்தும் வாழ்க்கைப்
பிரச்சனைகளைத் தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் எதிர்கொள்ள உதவுகின்றன; ஒற்றுமை
உணர்வை உண்டாக்குகின்றன; விழிப்புணர்வு கொடுக்கின்றன; நேர்வழியில் செல்வதற்கு வேண்டிய
உத்வேகத்தை அளிக்கின்றன; துன்பமும் தடுமாற்றமும் நிறைந்த இந்த மனித வாழ்க்கையில்
நம் தேசத்தைச் சரியான திசையிலும் முறையான பாதையிலும் வழி நடத்திச் செல்ல உதவுகின்றன.