குறிஞ்சிப் பாட்டில்
நெய்தல் நில மலர்கள்
முனைவர் இரா. பொன்னி
உதவிப் பேராசிரியர்
பாத்திமாக் கல்லூரி
மதுரை
மனிதனின் வாழ்கை
இயற்கையோடு பின்னிப் பிணைந்துள்ளது. இயற்கையினைப் பாடாத கவிஞர்கள் தமிழ்
இலக்கியங்களில் இல்லை என்றே கூறலாம். இலக்கியங்கள் இயற்கை மணம் கமழ இவர்களே
காரணம். மனித வாழ்வு இயற்கையோடு ஒன்றிய நிலையில் இலக்கியங்களிலும் இயற்கை
காணப்படுவதில் வியப்பேதும் இல்லை. இலக்கியத்தில் இயற்கை வளம் மிகுந்தால்
இலக்கியம் வளம் பெறும் என்பதை
அறிந்தே புலவர்கள் இயற்கையைப்
பாடியுள்ளனர். அவ்வகையில், தமிழ் மொழியின்
வளத்தை இன்றளவும் பறைசாற்றி நிற்பது சங்க இலக்கிய நூல்கள். அவற்றுள் கபிலர் பாடிய ‘பெருங்குறிஞ்சி’ எனப் பெயர்பெறும்
குறிஞ்சிப்பாட்டு இயற்கையைப் பாடுவதில் சிறப்பிடம் பெறுகிறது. இந்நூல் மலை வளம், குறிஞ்சி நில
அமைப்பு, மலர்கள், தாவரங்கள், விலங்குகள் என
இயற்கையை விரிவாக இயம்புகிறது. இங்கு கூறப்பட்ட 99 வகை மலர்களுள் நெய்தல் நில மலர்கள் மட்டும்
ஆய்வுப் பொருளாhகக் கொண்டு
இக்கட்டுரை அமைகிறது.
இந்நூலில் 99 பூக்களின் பெயர்கள், அதனதன் இயல்புகளுக்கு ஏற்ப அடைமொழிகளால்
வழங்கப்படுகின்றன. “கபிலர்
பாடிய பெருங்குறிஞ்சியில் வரையின்றிப் பூக்கள் மயங்கியவாறு காண்க” (தொல்காப்பியம் -
அகத்திணையியல், 19.) என்று
நச்சினினார்க்கினியர் உரை தருகிறார்.
திணை
மயக்கம்
ஒரு
நிலத்துக்கு உரிய பூ வேறொரு நிலத்தில பூக்க வாய்ப்புண்டு. ஒரே பறவை பல இடங்களில்
பறப்பதும் உண்டு. அதே போன்று ஒரு திணைக்குரியவை மற்றொரு திணைக்கு மயங்குவதும்
உண்டு. ஆனால் நிலமும் உரிப்பொருளும் மயங்குவதில்லை. இதற்கு ஒப்பாக,
“உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே”
எனத்
தொல்காப்பியரும் விளக்கம் தருகிறார். முதல், கரு, உரி என்கின்ற மூன்றனுள் உரிப்பொருளே சிறப்பானது. ஏனென்றால்
முதற்பொருளும், கருப்பொருளும்
காணப்படாத பாடல்களைக் கூட கண்டுவிடலாம். ஆனால் உரிப்பொருள் இல்லாதப் பாடல்களைக்
காண முடியாது. அவ்வகையில் குறிஞ்சிப்பாட்டும் பிற திணைக்குரிய முதலும் கருவும்
மயங்கிவர, உரிப்பொருளால் சிறப்புப் பெற்றுக் ‘குறிஞ்சிப் பாட்டு’ என
வழங்கப்படலாயிற்று.
குறிஞ்சி
நில மலைச்சாரலில் பூக்கும் மலர்கள் அந்நிலத்திற்கும் கூதிர்காலத்திற்கும். யாமப்
பொழுதிற்கும் மட்டும் உரியதாக இல்லாமல் பிற நிலப் பூக்களுடன் மயங்கிக் காணப்படுவதை,
“எந்நில மருங்கிற் பூவும்
புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாரா
ஆயினும்
வந்த நிலத்தின் பயத்த ஆகும்”
என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்கும்.
நெய்தல்
நிலப் பூக்கள்
தமிழரின்
ஐவகை நிலங்களில் கடலும் கடல் சார்ந்த இடமும் கொண்டது நெய்தல் திணை. நெய்தல் திணைக்குரிய மலர்களாக நெய்தல், அடம்பு, புன்னை, ஞாழல், கோங்கு, தாழை, தும்பை ஆகியன. இதனை,
“கானல் இடை
எலாம், ஞாழலும்
தாழையும்;;;; ஆர்ந்த புடை
எலாம், புன்னை;” (திணைமாலை 58) வரிகள் உறுதி
செய்யும்.
1. நெய்தல்
பூ
நெய்தல் பூ கடற்கரையோரங்களில் மிகுதியாக மலரும். ஆம்பல், கொட்டி, நீலம், நெய்தல், செங்கழுநீர், குமுதம் ஆகியவை ஒரே
குடும்பத்தைச் சார்ந்தவை என்பர். நெய்தல் மலரை நன்னீh மலர், உவர்நீர் மலர் என
இருவகைப்படுத்துவர். அவற்றுள் நன்னீர் மலரை நீர்நிலை மலர், வயல்வெளி மலர் எனப்
பகுப்பர்.
குறிஞ்சிப்பாட்டு நன்னீர் மலராக “நீள் நறு நெய்தல்” என்ற மலரினைக்
குறிப்பிடுகிறது. இப்பூக்கள் நீண்ட காம்பினைக் கொண்டது. சுனையிலும், குளங்களிலும்
பூக்கும்.
வயல்வெளி மலராக “மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்” என்கிறது.
இப்பூக்கள் குறுகிய காம்பினைக் கொண்டது. வயலில் பூக்கும்.
உவர்நீர் மலர் கடலோர உப்பங்கழிகளில் பூக்கும்.
2. ஞாழல் பூ
கபிலரால் குறிக்கப் பெற்ற மற்றொரு நெய்தல் பூ ஞாழல். ஐயவி
என்னும் வெண்சிறுகடுகு போல் இருக்கும் இப்பூக்கள் நெய்தல் நிலத்தில் மிகுதியாக
பூக்கும். இப்பூவினை முன்னர் ‘புலிநகக் கொன்றை’ என்று வழங்கப்பட்டது. தற்பொழுது தமிழர்கள்
பயன்படுத்திவரும் குங்குமப் பூ தமிழில் ஞாழல் பூ என வழங்கப்பட்ட என்பர்.
தலைவலியைக் குணப்படுத்தவும், வலியில்லாத குழந்தைப் பேற்றிற்கும் இப்பூப்
பயன்படுத்தப்படுகிறது.
3. புன்னைப் பூ
களிமண் நிலத்திலும், உப்புத் தண்ணீரிலும் வளரக் கூடியது புன்னை மலர். இம்மலரை “கடி இரும் புன்னை” என்கிறார் கபிலர்.
மிகுந்த மணமுடைய பெரிய புன்னையின் பூக்கள் மற்றும் பட்டையைத் தூள் செய்து தினமும்
ஒரு வேளை உண்டு வந்தால் மூட்டு வலி, சொறி சிரங்கு, குஸ்டம், மேகம் ஆகியவை குணமாகும்.
4. அடப்பம்பூ
அடும்பு அல்லது அடம்பு எனப்படும் இப்பூ கொடிவகையைச் சார்ந்தது.
கடற்கரையிலும் மணல் மேட்டிலும் படர்ந்து வளரக் கூடிய இயல்புடையது. இலைகள்
ஆட்டுக்காலின் குளம்படி இரு பிளவாக பிளந்திருப்பதால் ஆட்டுக்கால் அடம்பு என்றும்
வழங்குவர். இம்மலர் செந்நீல நிறத்தில் பெரியதாக காட்சியளிக்கும். அடும்பு மலர்
மருத்துவ மூலிகையாக பயன்படுத்தக்கூடியது. “மூட்டு வலியைக் குணமாக்கும் அடம்பு” என்றே கூறுவர்.
மேலும் வயிற்றுப் போக்கை நிறுத்தக் கூடியது; மலச்சிக்கலைப் போக்குவது; சிறுநீரைப் பெருக்கும் தன்மை கொண்டது. மூலம், குமட்டல், வாந்தியையும் குணமாக்கும்.
வயிற்று கோளாறுக்கு இது மருந்தாகவும், வலியைப் போக்கவும் பயன்படுகிறது.
5. தும்பை
தும்பையில்
பல்வகை உண்டு. வயல், கிராமப்புறங்கள், வறண்ட நிலங்கள் என
எவ்விடத்திலும் வளரும் இயல்புடையது. தும்ப, குப்பைமேனி, சூரணம் செய்து தினமும் உண்டு வர நோய்களும், மன உளைச்சலும்
தீர்ந்து, நோய்
எதிர்ப்பு சக்தியையும் பெருக்கும்.
“தும்பை மாலை
இளமுலை நுண்பூண் ஆகம் விலங்கு வோளே” (ஐங்குநூறு)
“அலர்பூந்
தும்பை அம்பகட்டு மார்பின்”(புறநானூறு)
என்கிற சங்க கால பாடல் வரிகள் தும்பைக்குச்
சான்றாகின்றன. தொல்காப்பியத்தில் தும்பைக்கு தனியாக ஒரு திணையினைக் கூறி இலக்கணம்
வகுக்கப்பட்டுள்ளது.
தும்பைக்கு மருத்துவப் பயன்களும் நிரம்ப உண்டு. இப்புவில்
செய்யும் மையினால் மஞ்சள்காமாலை குணமாகும். பூரான் கடி, தடிப்பு, அரிப்பு, பாம்புக்கடி, தலைவலி, கபம், சொறி, சிரங்கு, நமைச்சல், சளி, மூக்கில் சதை வளர்தல்
போன்ற நோய்களுக்கு அரியவகை மருந்தாகப் பயன்படுகிறது.
6. கோங்கம்
தாதும்,
தேனும்
நிறைந்த இம்மலர் கொத்தாகப் பூக்கும். பொன்னை ஒத்த நிறம் கொண்ட இவ்வழகிய மலர் வறண்ட
பிரதேசங்களில் வளரும். இதனை “விரிபூங் கோங்கம்” என்று சிறப்பித்துப் பாடுகிறார் கபிலர். சங்க கால மகளிர்
இம்மலரின் மகரந்தப்பொடியைப் பூசிக் கொள்வர். அதற்காக செம்பாலான செப்புகளில் விற்பனை செய்வர். வையை ஆற்றுப்படுகையில் பாணர் முற்றத்தில் கோங்க
மலர்கள் கொட்டிக் கிடப்பதாக சங்க நூல்கள் கூறும்.
நிறைவாக
இயற்கை வளம் மிகுந்த தமிழ் நாடு வாழ்வியல் நலமும் கொண்டது.
குறிஞ்சிப்பாட்டில் கபிலர் 99 வகை மலர்களை முதற்பொருளும், கருப்பொருளும் விரவி பாங்குற அமைத்துள்ளார். நெய்தல்நிலப்
பூக்கள் அழகுநலம் பெற்றுள்ளது; மருத்துவ குணம் மிகுந்துள்ளது. இன்றளவும் குறிஞ்சிப்பாட்டு
என்று கூறினால் மலர்கள் தான் அனைவருடைய நினைவிலும் இருக்கும். தமிழ் வளத்தைப்
பெருக்கும் பழந்தமிழ் நூல்களில் குறிஞ்சிப்பாட்டு தனித்ததோர் நலம் பெற்றுள்ளது.